எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் சாலை: மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி


எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயரில் சாலை: மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி
x

நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை’ என பெயர் சூட்டப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் 40 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடி மத்திய, மாநில அரசு விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை பெற்றவர் பிரபல பாடகர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

இவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது 4-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், சென்னையில் அவரது இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை என பெயர் சூட்டப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "ஒப்பற்ற இசைக் கலைஞரும் எனது மூத்த சகோதரருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரை, சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்குச் சூட்டி அறிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். லட்சக்கணக்கான கலை ஆர்வலர்களின் மனதில் இன்றும் வாழும் ஒரு பெரும் கலைஞனுக்குச் செய்யப்பட்டு இருக்கும் மரியாதை இது. பாலு அண்ணாவின் ரசிகர் கூட்டத்தில் ஒருவனாக என் பாராட்டுகளும் நன்றியறிதல்களும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு உரித்தாகட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story