ஆசிரியையை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு


ஆசிரியையை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை - சென்னை கோர்ட்டு தீர்ப்பு
x

ஆசிரியையை கட்டிப்போட்டு பணம், நகை கொள்ளை அடித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை

சென்னை ஓட்டேரி ராமலிங்கபுரம் டிரஸ்ட் ஸ்கொயர் தெருவில் வசித்து வருபவர் சுலோச்சனா (வயது 65). ஓய்வுபெற்ற ஆசிரியை. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர், வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் அவரது வாயை துண்டால் கட்டி, கை, கால்களை கட்டிப்போட்டு மிரட்டி பீரோவில் இருந்த பணம், தாலி சங்கிலி, காமாட்சி முத்துமணி மாலை எனப்படும் மற்றொரு சங்கிலி, வளையல் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து சென்னை தலைமை செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வி.புதூரைச் சேர்ந்த சுரேஷ் (25) மற்றும் அவரது நண்பர் மகேஷ் பாலாஜி (26) என்பது தெரியவந்தது. சுரேஷ் கைது செய்யப்பட்டார். மகேஷ்பாலாஜி தலைமறைவானார். இதனால் சுரேஷ் மீதான வழக்கு மட்டும் சென்னை அல்லிக்குளத்தில் உள்ள கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி உமாமகேஸ்வரி முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் பி.செந்தில் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சுரேஷ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story