அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி - பெண் உள்பட 2 பேர் கைது


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி - பெண் உள்பட 2 பேர் கைது
x

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

ஆவடி அடுத்த திருநின்றவூர் ரெட்டி குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சர்மிளா (வயது 26). இவர், திருநின்றவூர் பகுதியில் ஒரு டிராவல்ஸ் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (29) அடிக்கடி டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல டிக்கெட் போடுவதற்காக அவரது அலுவலகத்துக்கு வருவது வழக்கம்.

அப்போது கார்த்திகேயன், எனக்கு வருமானவரித்துறையில் அதிகாரிகள் தெரியும். அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று சர்மிளாவிடம் கூறினார். இதை நம்பிய சர்மிளாவும், தனது தம்பிக்கு அரசு வேலை வாங்கித் தரும்படி கூறினார்.

இதற்காக சர்மிளாவின் தம்பி மோகன் மற்றும் அவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தினேஷ் மற்றும் பிரசாத் ஆகிய 3 பேரும் ரூ.18 லட்சத்து 19 ஆயிரம் வரை கார்த்திகேயனின் தோழியான தாம்பரம் அகரம் பகுதியை சேர்ந்த யமுனா (27) என்பவரது வங்கி கணக்கில் செலுத்தினர்.

ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தராமல் கார்த்திகேயன் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சர்மிளா திருநின்றவூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன் மற்றும் அவரது தோழி யமுனா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் கார்த்திகேயன் வேலை வாங்கி தருவதாக பணத்தை பெற்று அதில் கார் வாங்கி தோழி யமுனாவுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று ஜாலியாக ஊர் சுற்றி வந்தது தெரிய வந்தது. கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story