ஆவடியில் உயிரிழந்த மூதாட்டியின் ரூ.2 கோடி சொத்துகள் அரசிடம் ஒப்படைப்பு - வாரிசுகள் இல்லாததால் போலீசார் நடவடிக்கை


ஆவடியில் உயிரிழந்த மூதாட்டியின் ரூ.2 கோடி சொத்துகள் அரசிடம் ஒப்படைப்பு - வாரிசுகள் இல்லாததால் போலீசார் நடவடிக்கை
x

ஆவடியில் வீட்டில் உயிரிழந்து கிடந்த மூதாட்டியின் ரூ.2 கோடி சொத்துகள் அவருக்கு வாரிசுகள் இல்லாததால் அரசிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

சென்னை

ஆவடி காமராஜர் நகர் மகிழம்பூ தெருவில் வசித்து வந்தவர் சுந்தரி பாய் (வயது 54). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி அவரது வீட்டுக்குள் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த சுந்தரி பாய் குறித்து விசாரித்தனர்.

அதில் சுந்தரி பாய் இறப்பதற்கு முன்பாக அதே மாதம் 14-ந் தேதி அவரது தங்கை ஜானகியும் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. ஜானகி, சுந்தரி பாய் இருவர் மட்டும் வீட்டில் வசித்து வந்த நிலையில் இருவரும் இறந்து விட்டதால் அவரது வீட்டில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பெட்டியை திறந்து பார்த்தனர். அதில் சுமார் 54 பவுன் நகை, ரூ.61 லட்சம் மற்றும் வீட்டின் பத்திரம், வங்கி புத்தகம் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.

உயிரிழந்த சுந்தரி பாய்க்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் அவருடைய சொத்துகளை வருவாய் துறையினரிடம் ஒப்படைக்க ஆவடி போலீசார் முடிவு செய்தனர். அதன் பேரில் நேற்று மாலை ஆவடி துணை தாசில்தார் செந்தில் முருகன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஆவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் ஒப்படைத்தனர்.

வருவாய்த்துறை அதிகாரிகள் அவற்றை ஆவடி கருவூலத்தில் பாதுகாப்புடன் வைத்தனர். தொடர்ந்து அவைகளை காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் இன்ஸ்டியூட் வசம் ஒப்படைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story