சேலத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு


சேலத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
x

கோப்புப்படம் 

சேலம் மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சேலம் மாவட்டத்தில் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், சின்னக்கவுண்டனூர் கிராமம் அருகே இன்று (6-9-2023) அதிகாலை சேலத்திலிருந்து பெருந்துறை நோக்கிச் சென்ற கார், சேலம்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னாக்கவுண்டனூர் பைபாஸ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக பின்புறம் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணம் செய்த ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், காவேரிபாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ், த/பெ.பச்சான் (வயது 55), ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ஈங்கூர், குட்டப்பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி (வயது 50), பாப்பாத்தி, க/பெ.பழனிசாமி (வயது 45), ஆறுமுகம், த/பெ.முத்தான் (வயது 45), மஞ்சுளா, க/பெ.ஆறுமுகம் (வயது 40), மற்றும் சேலம், கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரின் ஒரு வயது பெண் குழந்தை சஞ்சனா ஆகிய ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் விக்னேஷ் மற்றும் பிரியா ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story