ரூ.100 கோடி கடன் தருவதாக ரூ.4 கோடி மோசடி - 3 பேர் சிக்கினர்


ரூ.100 கோடி கடன் தருவதாக ரூ.4 கோடி மோசடி - 3 பேர் சிக்கினர்
x

சென்னையில் ரூ.100 கோடி கடன் தருவதாக ரூ.4 கோடி மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

மராட்டிய மாநிலம் நாக்பூரைச்சேர்ந்தவர் ஷியாமல் ஷட்டர்ஜி. இவர் தனது தொழில் நிறுவன வளர்ச்சிக்காக கடன் வாங்க முடிவு செய்தார். அப்போது சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் செயல்பட்ட, ஈஸ்ட்கோஸ்ட் பிராப்பர்ட்டீஸ் என்ற நிறுவனம் சார்பில், குறைந்த வட்டிக்கு கடன் தரப்படும் என்று ஆன்லைன் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டிருப்பதை ஷியாமல் ஷட்டர்ஜி பார்த்தார். அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினார். தனக்கு ரூ.100 கோடி கடன் தேவைப்படுவதாக தெரிவித்தார். அப்போது ஈஸ்ட்கோஸ்ட் நிறுவனத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 43), இம்தியாஸ் அகமது (37), பவன்குமார் (45) ஆகியோர், ரூ.100 கோடி கடன் தருவதாக தெரிவித்தனர்.அதற்கு 6 மாத வட்டி தொகை ரூ.4 கோடியை முன்பணமாக தரவேண்டும், என்று கூறினார்கள்.

இதை ஏற்று, ஷியாமல் ஷட்டர்ஜி ரூ.4 கோடியை கொடுத்தார்.ஆனால் மேற்கண்ட மோசடி நபர்கள் மூவரும், ரூ.100 கோடி கடனும் கொடுக்காமல், வட்டியாக வாங்கிய ரூ.4 கோடியை ஏப்பம் போட்டு, விட்டு தங்களது நிறுவனத்தையும் மூடிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில், ஷியாமல் ஷட்டர்ஜி புகார் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மோசடி நபர்கள் பன்னீர்செல்வம், இம்தியாஸ் அகமது, பவன்குமார்ஆகிய 3 பேரும் சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில் பதுங்கி இருந்தனர்.அவர்கள் கைது செய்யப்பட்டனர்.


Next Story