மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.5 கோடி அபராதம் வசூல்


மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.5 கோடி அபராதம் வசூல்
x

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.5 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.5 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரங்களில் அதிக அளவு மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்துக்கள் ஏற்படுவதால் அதை தடுக்கும் வகையில் பல்வேறு ரோந்து பணிகளும் இரவு நேரங்களில் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அபராத தொகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் இரவு நேரங்களில் மது போதையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை 7,532 நபர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

சென்னை பெருநகரில் 10 இடங்களில் அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் கடந்த 5-ந்தேதி முதல் 11-ம்தேதி வரை நேரில் அழைத்து வழக்குகளை முடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மூலம் மொத்தம் 816 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கான 84 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

6 வாரங்களில் அழைப்பு மையங்கள் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் மொத்தம் 4,922 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 5,738 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்தம் ரூ.5,93,78,500 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி அவரது வேறு எந்த வாகனமாக இருந்தாலும் பறிமுதல் செய்யவும் அவர்களின் அசையும் சொத்துக்களை கைப்பற்றவும் கோர்ட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு இதுவரை 347 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தபட செயல்பாட்டில் உள்ளன என்றும் சென்னை பெருநகர காவல் துறை எச்சரித்துள்ளது.


Next Story