சென்னை விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.50 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கர் உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாய்க்கு செல்வதற்காக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த நஜிருதீன் (வயது 30), ராஜா முகமது (32), ஜாகீர் உசேன் (32), கொழும்புக்கு செல்ல வந்த விஷ்ணு சாகர் (28), தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்ல வந்த சென்னையை சேர்ந்த அப்சர் அலி (27) ஆகிய 5 பேரையும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது அவர்கள் ஆடைக்குள் வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து கடத்திச்செல்ல முயன்றதை கண்டுபிடித்தனர்.

மேலும் அவர்கள் அணிந்து இருந்த காலணியிலும் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், சவுதி ரியால் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. 5 பேரிடம் இருந்தும் மொத்தம் ரூ.50 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story