கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை


கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் புகுந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்

கம்ப்யூட்டர் என்ஜினீயர்

சங்கராபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் மனைவி அனிஷா(வயது 26). வெங்கடேஸ்வரன் வெளிநாட்டில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருவதால் வீ்ட்டில் அனிஷா பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது மகள் தக்ஷிதா(6) என்பவளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அனிஷா வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தனது மகளை சிகிச்சைக்காக சோ்த்து அவளுடன்அங்கேயே தங்கி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நகை, பணம் கொள்ளை

இதற்கிடையே அனிஷாவின் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். உடனே அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று காலை சங்கராபுரத்துக்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அனிஷா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகை, 7 வெள்ளி ெபாருட்கள், ரூ.70 ஆயிரம் ஆகியற்றை யாரோ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இது குறித்து அனிஷா சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story