ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.87 லட்சம் நிலம் மோசடி


ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.87 லட்சம் நிலம் மோசடி
x

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.87 லட்சம் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்று மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

காஞ்சீபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் மல்லிகா (வயது 50). இவருடைய கணவர் சந்திரபாபு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு ஆவடி அடுத்த வெள்ளானூர் அந்தோணியார் நகரில் 1,200 சதுர அடியில் நிலம் உள்ளது.

தனது 2-வது மகளின் படிப்பு செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் அந்த நிலத்தை விற்க முடிவு செய்த மல்லிகா, வெள்ளானூர் சென்று பார்த்தபோது, அந்த நிலம் வேறு ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்திருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து மல்லிகா ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பொன்சங்கர் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சென்னை பெரம்பூர், மதுரை மாடசாமி தெருவை சேர்ந்த எட்வின் (44) என்பவர் சந்திரபாபு இறந்து விட்டதால் அவருடைய பெயரில் போலியாக இறப்பு சான்றிதழ் வாங்கி, அவருடைய மகள் தேவி என்று போலியாக வாரிசு சான்றிதழை பெற்று மேற்படி ரூ.87 லட்சம் மதிப்புள்ள நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட எட்வினை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் நில அபகரிப்பு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story