'புதுமைப்பெண்' திட்ட பயனாளிகள் எண்ணிக்கையில் சேலம் முதலிடம்
'புதுமைப்பெண்' திட்ட பயனாளிகள் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
'புதுமைப்பெண்' திட்டம்
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000-ம் வீதம் உதவித்தொகை வழங்கும் 'புதுமைப்பெண்' 2- ம் கட்ட திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி கூட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 6 ஆயிரத்து 90 மாணவிகளுக்கு 'புதுமைப்பெண்' திட்டத்தில் வங்கி கணக்கு புத்தகம் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் ஆகிேயாரின் நலன் காக்கும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 'புதுமைப்பெண்' திட்டத்தில் முதல் கட்டமாக 8 ஆயிரத்து 16 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.
நன்றாக படிக்க வேண்டும்
தற்போது 2-ம் கட்டமாக 6 ஆயிரத்து 90 மாணவிகள் பயன் பெற உள்ளனர். தமிழகத்தில் 'புதுமைப்பெண்' திட்டத்தில் பயன் பெறும் மாணவிகள் எண்ணிக்கையில் சேலம் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. எனவே மாணவிகள் உயர்கல்வியை நன்றாக படித்து தகுதியான வேலைகளில் சேரவேண்டும்.
படிக்கும் காலத்தில் கவனச்சிதறல்கள் இல்லாமல் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.