திருத்தணி அருகே காப்புக்காட்டில் மணல் திருட்டு; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


திருத்தணி அருகே காப்புக்காட்டில் மணல் திருட்டு; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x

கார்த்திகேயபுரம் காப்பு காட்டில் கனிம வளங்கள் திருட்டை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர்

திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் அருகே அடர்ந்த காப்புக்காடு உள்ளது. இந்த காப்புக்காடு அருகே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராவல் மண் கொள்ளையடிக்கப்பட்டது. கிராவல் மண் திருடப்பட்டுள்ள இடம் 20 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த் துறையினரால் பட்டா வழங்கப்பட்டு இதுவரை மக்கள் குடியேற்றம் இல்லாத பகுதியாக இருந்தது வருவாய்த் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வனப்பகுதியில் மண் திருட்டை தடுக்க கார்த்திகேயபுரம் காப்பு காட்டில் 6 இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பள்ளங்கள் தோண்டப்பட்டது.

இதனால் அப்பகுதியில் கனிம வளங்கள் திருடப்படுவது தடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காப்பு காட்டிற்கு செல்லும் வழிகளை சமன் செய்து, அந்த வழியாக லாரி போன்ற வாகனங்கள் காப்புக்காட்டுக்குள் சென்று மணல் திருட்டு போன்ற செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபடுவதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கனிம வளங்கள் திருட்டை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story