வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர்களை பிடித்த போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு
செங்கல்பட்டு அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு தாலுகா குற்றப்பிரிவு போலீஸ்காரர் அருள் என்பவர் சாதாரண உடையில் பணியில் இருந்து வந்துள்ளார். அப்போது சென்னை நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் பெற முயன்றுள்ளனர்.
இதனைக் கண்ட போலிஸ்காரர் அருள் அந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஒழலூர் பகுதியைச் சேர்ந்த சுதர்சன் (வயது 22) என்பவர் கையில் இருந்த கத்தியை எடுத்து போலிஸ்காரர் அருளின் இடது தோள்பட்டையில் வெட்டி விட்டு இருவரும் தப்பியோடி உள்ளனர்.
தொடர்ந்து விடாது துரத்திய போலீஸ்காரர் அருள் சுதர்சனை மடக்கி பிடித்து கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். இதனை அடுத்து போலீஸ்காரர் அருளுக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சுதர்சனிடம் இருந்த அரிவாளை பறிமுதல் செய்து தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.