காஞ்சீபுரம் அருகே குடோனில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


காஞ்சீபுரம் அருகே குடோனில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

காஞ்சீபுரம் அருகே குடோனில் பதுக்கி வைத்த 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

ரேஷன் அரிசி பதுக்கல்

காஞ்சீபுரம் அருகே குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து, அதிக விலைக்கு காஞ்சீபுரம் பகுதியில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும், டிபன் கடைகளுக்கும் சிலர் விற்பனை செய்யப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஆபாஷ்குமார், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர்.

2 பேர் கைது

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முகேஷ்ராவ் தலைமையில் காஞ்சீபுரம் அருகே ஓரிக்கை, திருவேங்கையப்பன் நகரில் உள்ள ஒரு குடோனை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு சுமார் 50 கிலோ எடை கொண்ட 140 மூட்டைகளில் மொத்தம் 7 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பதுக்கி வைத்திருந்த 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் விற்க பதுக்கி வைத்திருந்த ஓரிக்கையை சேர்ந்த மாலிக் பாஷா (வயது 36), கிஷோர் (38) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.


Next Story