செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஐகோர்ட்டு


செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது ஐகோர்ட்டு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 16 Oct 2023 4:29 PM IST (Updated: 16 Oct 2023 6:01 PM IST)
t-max-icont-min-icon

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை ஏற்கனவே அமலாக்கத்துறை தாக்கல் செய்து விட்டது. இந்த வழக்கில் 2 முறை ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது.

சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு உடல்நலம் குன்றியுள்ளது. கால்கள் மரத்துப்போனதாகவும், மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறியதால், கடந்த 9-ந்தேதி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் கடந்த 10-ந்தேதி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில், செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின்படி ரூ.67 கோடி சட்டவிரோத பணம் இருப்பதாக தெரிகிறது. ஸ்டான்லி மருத்துவமனையின் அறிக்கைபடி செந்தில்பாலாஜி வெளிமருத்துவமனையில் சிகிச்சைபெற தேவையில்லை. அரசு மருத்துவமனையில் சிகிச்சைதர முடியாது என்ற நிலை இருந்தால் மருத்துவ காரணத்திற்கு ஜாமீன் தரலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முடியாதா? செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் அளித்தால் சாட்சியை கலைப்பார் என்று அமலாக்கத்துறை கூறுகிறது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி எழுப்பினார். இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கு ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் உள்ளபோது சாட்சிகளை எப்படி கலைக்க முடியும்? கோர்ட்டே மருத்துவரை நியமித்து உடல்நிலை குறித்து ஆய்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார்.


Next Story