'செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது' - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி


செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
x
தினத்தந்தி 16 Jun 2023 6:02 PM IST (Updated: 16 Jun 2023 6:08 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் தொடர்பான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரைக்கு கவர்னர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் 13-ந்தேதி இரவு கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு வரும் 28-ந்தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகிய துறைகளை மின்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடமும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது என்றும் முடிவுவெடுத்து இதுகுறித்து கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால் அந்த பரிந்துரையில் செந்தில் பாலாஜி என்ன காரணத்துக்காக கைது செய்யப்பட்டார்? என்ற விவரம் இல்லாததால் அதை குறிப்பிடும்படி அரசுக்கு அதை கவர்னர் திருப்பி அனுப்பிவிட்டார். இதன் காரணமாக அமைச்சர்களின் இலாகா மாற்றமும் ஏற்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கவர்னர் கேட்ட விளக்கத்துக்கு என்ன மாதிரியான பதில் தெரிவிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உரிய விளக்கங்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர முடியாது என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கான இலாகா மாற்றத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அவர் அமைச்சராக தொடர முடியாது எனக்கூறி முதல்-அமைச்சரின் பரிந்துரையை கவர்னர் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.


1 More update

Next Story