'ஷாக்' அடிக்கும் புதிய கட்டண பில்: மின்சார கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கும் நடைமுறை எப்போது வரும்? ஓங்கி ஒலிக்கும் பொதுமக்களின் குரல்


ஷாக் அடிக்கும் புதிய கட்டண பில்: மின்சார கட்டணம் மாதந்தோறும் வசூலிக்கும் நடைமுறை எப்போது வரும்? ஓங்கி ஒலிக்கும் பொதுமக்களின் குரல்
x

புதிய மின்சார கட்டண ‘பில்’ ஷாக் அடிக்கும் வகையில் இருப்பதாகவும், எனவே மாதந்தோறும் மின்சார கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சென்னை

கடன் சுமை

ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 226 கோடி கடன் சுமையில் தத்தளிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக 8 ஆண்டுகளுக்கு பின்னர் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. வீட்டு பயன்பாடு மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.4.50 (400 யூனிட் வரை) முதல் ரூ.11 வரை (1,000 யூனிட்டுக்கு மேல்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த மாதம் 10-ந்தேதி அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதை கணக்கெடுத்து உயர்த்தப்பட்ட விகிதாச்சாரத்தின் அடிப்படையில் கட்டணத்தை குறிப்பெடுத்து வழங்கி வருகிறார்கள். இந்த அட்டையில் இடம் பெற்றுள்ள முந்தைய மின்சார கட்டணத்துடன் புதிய கட்டணத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது மக்களுக்கு 'ஷாக்' அடித்தது போல் இருக்கிறது.

'எங்கள் வீட்டுக்கு இதுவரையில் இவ்வளவு மின்சாரம் கட்டணம் வந்ததே இல்லை. மின்சார மீட்டரை சரியாக பார்த்தீர்களா... சரியாக கணக்கெடுத்தீர்களா....? மின்சார வாரியத்தின் கடன் சுமையை எங்கள் தலையில் ஏன் ஏற்றி வைக்கிறீர்கள்...? என்று மின்வாரிய ஊழியர்களை கேள்வி கணைகளால் மக்கள் துளைத்தெடுக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மக்களின் ஆதங்கம் ஒருபுறம் இருந்தாலும் மின்சார கட்டணத்தை குறித்த காலக்கெடுவுக்குள் செலுத்தவில்லை என்றால் அபராதம், மின் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் பாயும் என்ற அச்சத்தில் இந்த சுமையை தாங்கி கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

சிறு தொழில்கள் பாதிப்பு

மின்சார கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னர் எவ்வளவு கட்டணம் வந்துள்ளது? என்பது குறித்து பல தரப்பட்ட மக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-

தமிழக சிறுதொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் டி.மூர்த்தி:-

மின்சாரம்தான் சிறு மற்றும் குறுந்தொழிலுக்கு அச்சாரமாக இருக்கிறது. உதிரி பாகங்களை எந்திரங்கள் தான் வடிவமைத்து தயாரிக்கின்றன. இதன் மூலம் இந்த தொழிலில் மின்சார பயன்பாடு அதிகம் இருக்கிறது. எனவே மின்சார கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை வலியுறுத்தி வந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உயர்த்திவிட்டனர். கருத்துக்கேட்பு கூட்டம் கண்துடைப்பாக முடிந்து போனது. தற்போது நான் நடத்தி வரும் தொழில்நிறுவனங்களுக்கு மின்சார கட்டணம் கடுமையாக வந்துள்ளது.

கொரோனா காலக்கட்டத்தில் சிறுதொழில்கள் கோமா நிலைக்கு தள்ளப்பட்டிருந்தன. அதில் இருந்து மெல்ல, மெல்ல மீண்டு வரும் வேளையில் மின்சார கட்டண உயர்வு சிறுத்தொழில்களை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே சிறுதொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தில் சலுகைகளை அளித்து இந்த தொழிலை அரசாங்கம் கைத்தூக்கி விடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவு மில்லில் அரைக்கும் கட்டணம்

சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த மாவு மில் உரிமையாளர் சாதீக்:-

மாவு மில் தொழிலுக்கு மூலதனமே மின்சாரம்தான். அரிசி, கோதுமை, வத்தல் போன்ற பொருட்களை அரைப்பதற்கு மக்கள் அதிகம் வருவதால் எந்திரங்கள் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதனால் மின்சாரம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே மின்சார கட்டணமாக ரூ.13 ஆயிரம் கட்டி வந்தேன். தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் மின்சார கட்டண பில் வந்தது. மின்சார யூனிட்டை கணக்கிட்டு பார்த்தால் மின்சாரத்தை கணக்கெடுக்க வந்த ஊழியர் தவறு செய்திருக்கலாம் என்று கருதுகிறேன். இதுகுறித்து மின்சார வாரியத்தில் மனு அளித்திருக்கிறேன். அதே நேரத்தில் இந்த மின் கட்டண உயர்வை ஈடுசெய்யும் வகையில் மாவு மில்லில் அரைக்கப்படும் பொருட்கள் விலை பட்டியலை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டு வருகிறது.

மின் கட்டண சுமை இறக்கி வைக்கப்படுமா?

நசரத்பேட்டையை சேர்ந்த இல்லத்தரசி செல்வகுமாரி:-

எங்கள் வீட்டுக்கு முந்தைய மின்சார கட்டண தொகையாக ரூ.4 ஆயிரத்து 254 வந்திருந்தது. அந்த சமயத்தில் மின்சார கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து செயல்படுத்தினோம்.

எனினும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மின்சார கட்டணம் ரூ.1,163 அதிகரித்து ரூ.5 ஆயிரத்து 547 பில் தொகையாக வந்துள்ளது. 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணத்தை வசூலிப்பதால்தான் இவ்வளவு கட்டணம் ஏறி இருக்கிறது.

மாதந்தோறும் கட்டணத்தை வசூலித்தால் யூனிட் வரம்பு தாண்டாது. இதன் மூலம் இவ்வளவு கட்டண உயர்வு இருக்காது. எனவே இந்த கோரிக்கையை அரசாங்கம் பரிசீலித்து நிறைவேற்றி தர வேண்டும்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த இல்லத்தரசி எல்.இளவரசி:-

நாங்கள் கூட்டுக்குடும்பம். எனவே எங்கள் வீட்டில் டி.வி. ஏ.சி., பேன், டியூப் லைட் போன்ற மின்னணு சாதன பொருட்கள் பயன்பாடு அதிகம் உள்ளது. இதனால் 2 மாதங்களுக்கான மின் கட்டண தொகை ரூ.9 ஆயிரம் வரை வரும்.

தற்போது மின்சார கட்டணம் உயர்வுக்கு பின்னர் ரூ.13 ஆயிரம் கட்டணமாக வந்திருக்கிறது. இந்த கட்டண உயர்வு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. எனவே இனிமேல் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலை ஏற்பட்டுள்ளது.

எழும்பூரை சேர்ந்த இல்லத்தரசி ரபீனா நிரஞ்சன்:-

எனது வீட்டுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.3 ஆயிரத்து 298 மின்சார கட்டண தொகை வந்திருந்தது. தற்போது இந்த மாதம் ரூ.2 ஆயிரத்து 85 அதிகரித்து உள்ளது. பில் தொகை ரூ.5 ஆயிரத்து 383 ஆக எகிறி உள்ளது.

மாதந்தோறும் பட்ஜெட் போட்டு வாழ்க்கையை நடத்தும் மக்களுக்கு இந்த மின்சார கட்டண உயர்வு மிகப்பெரிய சுமையை தலையில் ஏற்றி வைத்துள்ளது. எனவே தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி மாதந்தோறும் மின்சார கட்டணத்தை வசூலிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

மக்கள் தலையில் ஏற்றி வைக்கப்பட்டுள்ள மின் கட்டண சுமையை இறக்கி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஓங்கி ஒலிக்கும் குரல்

அமலுக்கு வந்துள்ள மின்சார கட்டண உயர்வு மக்களுக்கு 'ஷாக்' அடிக்கும் வகையில் இருந்தாலும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலையை மக்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது.

டியூப் லைட்டை பகலில் தேவை இல்லாமல் பயன்படுத்தாமல் ஆப் செய்ய வேண்டும். காற்றுக்காக மின்விசிறி பயன்பாட்டை குறைத்து வீட்டு ஜன்னல், கதவை திறந்து வைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில்தான் டி.வி. பார்க்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்க தொடங்கி விட்டனர். அதே நேரத்தில் தமிழக அரசு மாதந்தோறும் மின்சார கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை விரைவில் கொண்டு வரவேண்டும் என்ற குரலும் மக்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்கிறது.


Next Story