புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பொறுப்பேற்பு


புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 19 Oct 2023 7:30 PM GMT (Updated: 19 Oct 2023 7:30 PM GMT)

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர், வளர்ச்சி திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும் என்று கூறினார்.

கோயம்புத்தூர்
கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக சிவகுரு பிரபாகரன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர், வளர்ச்சி திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும் என்று கூறினார்.


புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு


கோவை மாநகராட்சி ஆணையாளராக இருந்த மு.பிரதாப், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னை மாநகராட்சியில் வடக்கு மண்டல துணை ஆணையாளராக பணியாற்றிய சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டார்.


அவர் நேற்று கோவை மாநகராட்சியின் 29-வது ஆணையாளராக கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் மு.பிரதாப் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு வாழ்த்து கூறினார். தொடர்ந்து அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


பின்னர் புதிய ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-


பல்வேறு ஆலோசனைகள்


சென்னை மாநகராட்சியில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. அங்கு பாதாள சாக்கடை, சாலை, மருத்துவம், பள்ளி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொண்டு உள்ளேன். மேலும், வட சென்னையில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு உள்ளேன்.


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி உள்ளனர். அவர்களிடம் இருந்து எப்படி பணிகளை திறம்பட செய்வது என கற்றுக்கொண்டேன்.


விரைவில் முடிக்க நடவடிக்கை


கோவை மாநகராட்சியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து புரிந்து கொண்டு, அவற்றை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் மாநகராட்சியின் முழு வளர்ச்சிக்கு எனது பணிகளையும், நேரத்தையும் செலவிடுவேன். கோவையில் பாதாள சாக்கடை திட்டத்தை சரியாக கையாளுவேன். அதுபோன்று இங்குள்ள தன்னார்வலர்கள் நல்ல வகையில் பணிகள் செய்ய பயன்படுத்தப்படுவார்கள்.


இவ்வாறு கூறினார்.


3-வது இடத்தில் தேர்வு


கடந்த 2018-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தமிழக அளவில் 3-வது இடத்தில் தேர்வான சிவகுரு பிரபாகரனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மேல ஒட்டங்காடு ஆகும். இவர் தனது கிராமத்துக்கு பல்வேறு வசதிகளை உருவாக்கி கொடுத்து உள்ளார்.


ஆரம்பத்தில் நெல்லை மாவட்டத்தில் பயிற்சி கலெக்டராக பணியாற்றிய அவர், கொடைக்கானல், பத்மநாபபுரம் ஆகிய பகுதிகளில் சப்-கலெக்டராகவும், சென்னை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் துணை ஆணையாளராகவும் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.



Next Story