அக்.1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்


அக்.1ம் தேதி  தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 26 Sept 2023 12:44 PM IST (Updated: 29 Oct 2023 7:48 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு பரவலை தடுக்க அக்டோபர் 1-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

கேரளாவில் நிபா வைரஸ் சற்று அதிகரித்து வருவது போல, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே பரவி வருகிறது. தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழையால், அங்காங்கே நீர் தேங்கி கொசு உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இத்தகைய கொசுக்கள் டெங்கு போன்ற நோய்களை பரப்பி பல உயிரிழப்பிற்கு காரணமாகின்றன. அந்த வகையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும் ஆங்காங்கே பரவி வருகிறது.

இதனால் ஏற்படும் தீவிர காய்ச்சல் காரணமாக ஒரு சில மரணங்களும் தமிழகத்தில் நிகழ்ந்துவிட்டன. டெங்கு பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் அக்.1-ஆம் தேதி 1,000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் டெங்கு, மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை குழுக்களும், பள்ளி மாணவர்களுக்கான 805 குழுக்களும் செயல்பட்டு வருகின்றது.

வரும் ஞாயிற்றுக்கிழமை டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. மருத்துவ குழுவினர் தினந்தோறும் காய்ச்சல் பாதித்த இடங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை முகாம்கள் நடத்த உள்ளனர். பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முகாம்கள் நடத்தப்பட்டு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதை செலுத்த செல்கிறோம் என்றும் இன்று முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

1 More update

Next Story