திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனி சிகிச்சை பிரிவு


திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு தனி சிகிச்சை பிரிவு
x

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

தமிழகத்தில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலும் பொதுமக்கள் பலர் காய்ச்சலால் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என ரத்த பரிசோதனையும் செய்யப்படுகிறது.

இதுவரை குழந்தைகள் உட்பட 4 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மேலும் பரவ வாய்ப்பு உள்ளதால் அனைத்து மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளிலும் இதற்கான தனி சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்க வேண்டும் என தமிழக சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 70 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களுக்கு ஓரிரு நாட்களில் காய்ச்சல் குணமாகவில்லை என்றாலோ, பசி இன்மை, குமட்டல், வாந்தி, உடல்சோர்வு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், வாய், பல் ஈறு மற்றும் மூக்கில் இருந்து ரத்த கசிவு, வயிற்று வலி, மூச்சு விட சிரமம், மயக்கம் ஏற்படுதல் என, இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் காய்ச்சலை குணப்படுத்த தேவையான மருந்து, நரம்பு வழி மூலமாக செலுத்தப்படும் மருந்து, திரவம், நிலவேம்பு கஷாயம், ரத்த தட்டணுக்கள் குறைவை சரி செய்ய 24 மணி நேரம் இந்த சிறப்பு பிரிவு இயங்கும். எனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியை எந்த நேரத்திலும் அணுகலாம் என திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story