ஸ்ரீரங்கம் கோவில் மோதல் விவகாரம்: ஆந்திர பக்தர்கள் மீது வழக்குப்பதிவு


ஸ்ரீரங்கம் கோவில் மோதல் விவகாரம்: ஆந்திர பக்தர்கள் மீது வழக்குப்பதிவு
x

ஆந்திராவை சேர்ந்த சென்னாராவ், சந்தாராவ் சந்தா, கட்டா ராமு என்ற 3 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலஸ்தானம் முன்பு ஆந்திர பக்தர்கள், கோவில் காவலாளிகள் இடையே நேற்று திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆந்திராவை சேர்ந்த சென்னாராவ், சந்தாராவ் சந்தா, கட்டா ராமு என்ற 3 பேர் காயம் அடைந்தனர்.அதில் ஒருவருக்கு மூக்கு உடைந்து, ரத்தம் வழிந்தது. மேலும் 3 காவலாளிகளுக்கும் காயம் ஏற்பட்டது. மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆந்திர பக்தர் சந்தாராவ் சந்தா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீசார் கோவில் ஊழியர்களான பரத், செல்வா, விக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக ஆந்திர பக்தர்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னாராவ் உள்ளிட்ட பக்தர்கள் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story