எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு: 44 ஆண்டுகளாக கடைசி இடத்தை பிடிக்கும் வடமாவட்டங்கள்...அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு: 44 ஆண்டுகளாக கடைசி இடத்தை பிடிக்கும் வடமாவட்டங்கள்...அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்
x

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் 44 ஆண்டுகளாக கடைசி இடத்தை பிடிக்கும் வடமாவட்டங்கள் இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 1980-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இன்று வரை 44 ஆண்டுகளாகவே வட மாவட்டங்கள் கடைசி இடங்களைத் தான் பிடித்து வருகின்றன.

தேர்ச்சி விகிதங்களில் ஒருமுறை கூட வட மாவட்டங்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்தது இல்லை. அதேபோல், ஒருமுறை கூட கடைசி 10 இடங்களில் தென் மாவட்டங்கள் வந்தது கிடையாது. இந்த நிலையை மாற்றுவதற்கு தமிழகத்தை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்த அரசுகள் எந்த முயற்சியும் செய்யவில்லை.

தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் கடைசி இடங்களைப் பிடிப்பதற்கான முதன்மை காரணம், அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான். தேர்ச்சி விகிதப் பட்டியலில் முதலிடம் என்று ஒன்று இருந்தால் கடைசி இடம் என்று ஒன்று இருக்கத்தான் வேண்டும்.

அது இயல்பானது தான். ஆனால், கடந்த 44 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் அனைத்துமே கடைசி இடங்களைத் தான் பிடிக்கின்றன என்றால் அது அந்த மாவட்டங்களின் தவறு அல்ல. மாறாக தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகளின் தோல்வி தான்.

வட மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் எவ்வளவு, ஒவ்வொரு பாடத்துக்கும் எவ்வளவு ஆசிரியர்கள் உள்ளனர்? வட மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் உள்ள ஓராசிரியர்கள் பள்ளிகள் எவ்வளவு என தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story