வாலிபரின் கவனத்தை திசை திருப்பி பணம், செல்போன் திருட்டு
ஆவடி வெள்ளானூர் அருகே வாலிபரின் கவனத்தை திசை திருப்பி பணம், செல்போன் திருடிய சென்ற மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆவடி வெள்ளானூர் அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). இவர், திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள மசாலா நிறுவனத்தில் கடைகளில் பணம் வசூலிக்கும் வேலை செய்து வருகிறார். இவர் ஆவடியில் புதிய ராணுவ சாலையில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து பணத்தை வசூல் செய்து கொண்டு மீண்டும் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்மநபர், 'உங்கள் முதுகில் ஏதோ இருப்பதாகவும், அதனை கழுவி கொள்ளும்படியும் கூறி தண்ணீர் பாட்டிலை கொடுத்தார். அதை வாங்கி, தண்ணீர் ஊற்றி முதுகை துடைத்த மணிகண்டன், பின்னர் வாகனத்தை எடுக்க வந்தபோது அதில் இருந்த வசூல் பணம் ரூ.70 ஆயிரம் மற்றும் செல்போன் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர்தான் மர்மநபர் தன் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் பணம் , செல்போனை திருடிச்சென்றதை அறிந்தார். இதுபற்றி ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.