அரக்கோணம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்


அரக்கோணம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
x

அரக்கோணம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு உரிய ஊதிய உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் வாழும் ஏறத்தாழ 10000 நெசவாளர் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, விசைத்தறி உரிமையாளர்களிடமிருந்து உரிய ஊதிய உயர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் திருவள்ளூர் - அரக்கோணம் பகுதிகளில் வாழும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படாததால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் பலமுறை மனு கொடுத்தும் உரிய ஊதியம் பெற்றுத்தர எவ்வித உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்து தவித்து வருவதோடு, அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் கொடுஞ்சூழல் ஏற்பட்டுள்ளது. கடின உடல் உழைப்பு புரியும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வு நசிந்துவிடாமல் காக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய பொறுப்பும், கடமையுமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாத (மீட்டருக்கு ரூ.10) உரிய ஊதிய உயர்வினை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

மேலும், விசைத்தறி தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளான ஒவ்வொரு மாதமும் கூலியை முறையாக வழங்க வேண்டுமெனவும், ஆண்டுக்கு ஒருமுறை விலைவாசிக்கு ஏற்ப கூலி உயர்வினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், 60 வயது நிரம்பிய நெசவுத்தொழிலாளர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டுமெனவும், பத்திரப்பதிவு செய்து குடியிருக்கும் நெசவுத்தொழிலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டுமெனவும், பணியின்போது நிகழும் விபத்துக்களில் உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு 5 லட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியாக வழங்க வேண்டும்.

அரசு நிர்ணயம் செய்யும் கூலி அடிப்படையிலேயே வருமானச் சான்று வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட விசைத்தறி தொழிலாளர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு விரைந்து நிறைவேற்றித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story