மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் அளவுக்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ள திமுக அரசிற்கு கடும் கண்டனம் - ஓபிஎஸ்


மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் அளவுக்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ள திமுக அரசிற்கு கடும் கண்டனம் - ஓபிஎஸ்
x

தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்தாகும் அளவுக்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ள திமுக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாட்டில் தற்போது கிட்டத்தட்ட மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்ற நிலையில், இதில் பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டன.

மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் ஒத்துழைப்புடன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் துவங்கப்பட்டன. மருத்துவத்திற்கென தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் என்கிற தனிப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில்தான்.

இப்படி மருத்துவப் பல்கலைகழகத்தையும், மருத்துவக் கல்லூரிகளையும் உருவாக்கிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம். இப்படி உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளை தக்கவைத்துக் கொள்ளக்கூட தகுதியற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றிற்கான அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் உள்ளதாகவும், இதன் காரணமாக வரும் கல்வியாண்டில் மேற்படி கல்லூரிகளில் மருத்துவ இருக்கைகளை நிரப்ப முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதன் காரணமாக கிட்டத்தட்ட 500 மருத்துவ இருக்கைகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. அரசின் திறமையின்மையே இதுபோன்ற நிலைக்கு காரணம். தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கிற்கு, அலட்சியப் போக்கிற்கு, கவனக் குறைவிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்படி மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்தாவதற்கான காரணங்களாக கூறப்படுவது ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகை இல்லாதது, புகைப்படக் கருவிகள் சரியாக இயங்காதது உள்ளிட்டவை ஆகும் என பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது குறித்து தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் தெரிவிக்கையில், வருகைப் பதிவேடு மற்றும் விடுமுறை கடிதங்கள் பராமரிக்கப்படுகின்றன என்றும், சில இடங்களில் பருவநிலை காரணமாக புகைப்படக் கருவிகள் வேலை செய்யவில்லை என்றும் கூறி இருக்கிறார்.

அதே சமயத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 450 பேராசிரியர் பணியிடங்களும், 550 உதவி பேராசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதாகவும், அண்மையில் துவங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும், மருத்துவக் கல்வி மாணவ, மாணவியரை நம்பி அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆர்வம் காட்டுவதில்லை என்றும், உயர் நீதிமன்றத் தடையை நீக்க நடவடிக்கை எடுக்காமல், அதைக் காரணம் காட்டி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும், அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த செய்தி சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையிலும் வெளி வந்துள்ளது. அதாவது, மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்பாததும் மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்திற்கான காரணம் என்பது அரசு மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

மொத்தத்தில், அனைத்துத் துறைகளையும் அழித்து வரும் அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

பொதுமக்களின் நலனையும், மருத்துவர்களின் நலனையும், மருத்துவ பயிலவிருக்கும் மாணவ, மாணவியரின் நலனையும் கருத்தில் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை நீக்கவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் நடவடிக்கை எடுத்து, மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Next Story