நல்லம்பள்ளி வள்ளுவர் நகரில் சேதம் அடைந்த சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்
நல்லம்பள்ளி:
வள்ளுவர் நகரில் சேதம் அடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி, அந்த சாலையில் தேங்கி நின்ற தண்ணீரில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.
சேதம் அடைந்த சாலை
நல்லம்பள்ளி அருகே ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதி மற்றும் ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தை அமைந்துள்ள பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதம் அடைந்து, குண்டும், குழியுமாக மாறியுள்ளது. தற்போது பெய்து வரும் மழைக்கு சேறும் சகதியுமாக மாறியிருப்பதால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. இதனால் குடியிருப்புகளுக்கு செல்லும் மக்கள் மற்றும் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் அல்லது நடந்து வரும் போது, சேற்றில் சிக்கி வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் நிலை உள்ளது.
நாற்று நட்டு போராட்டம்
இவ்வாறு சேறும் சகதியுமாக மாறியுள்ள சாலையை, புதிய தார் சாலையாக அமைத்து தரக்கோரி பலமுறை அப்பகுதி குடியிருப்பு மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்பு மக்கள், வள்ளுவர் நகர் பகுதியில் சேறும் சகதியுமாக மாறியுள்ள சாலையில் நாற்று நட்டு நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் கவுரம்மாள் அரிச்சந்திரன் போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்பு பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்கு பின் உங்களது கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் உறுதி அளித்தார். அதன்பிறகு அந்த பெண்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பெண்கள் நடத்திய இந்த நூதன போராட்டம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.