விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்


விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்
x

பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

விசைத்தறி தொழிலாளர்கள்

பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து பிரிவு ஆண், பெண் தொழிலாளர்களுக்கும் 75 சதவீதம் கூலி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி, பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் அசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தொழிற்சங்க சங்க நிர்வாகிகள், பள்ளிபாளையம் வட்டாரத்தில், சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விசைத்தறி தொழிலை சார்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஏற்படாத நிலை உள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், விசைத்தறி தொழிலாளர்கள் குறைந்த கூலியில் பணிபுரிவதால் மிகுந்த பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும், விசைத்தறி தொழிலாளர்களின், கூலி உயர்வு பிரச்சினையில், சுமுக தீர்வு எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

100-க்கும் மேற்பட்டோர்

ஆர்ப்பாட்டத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன், விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.மோகன், சி.ஐ.டி.யு. சங்க மாவட்ட செயலாளர் என்.வேலுச்சாமி, கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி, விசைத்தறி சங்க பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துக்குமார், விசைத்தறி சங்க ஒன்றிய குழு நிர்வாகிகள் குமார், ஜெயபால், முருகேசன், அருள்மணி, மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள், விசைத்தறி தொழிலாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


Next Story