மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும்பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைதர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் படிக்கும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கல்வி உதவித்தொகை
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டு வருமானம் ஒரு ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் அல்லது மாணவிக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த கல்வி உதவித் தொகையை பெற 2023-2024-ம் கல்வியாண்டில் புதிய விண்ணப்பங்கள் மற்றும் ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெற்றவர்களுடைய புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள மாணவ, மாணவிகள், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களை அணுகலாம். அல்லது https://bcmbcmw.tn.gov.in./welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியில் இருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பரிந்துரை
2023-2024-ம் நிதி ஆண்டிற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்கள் சான்றோப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், இரண்டாவது தளம், சேப்பாக்கம். சென்னை- 05 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். புதுப்பித்தல் விண்ணப்பங்களை வருகிற டிசம்பர் மாதம் 15-ந்தேதிக்குள்ளும், புதிய விண்ணப்பங்களை வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதிக்குள்ளும் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.