திருவள்ளூரில் சட்ட கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் - 30 பேர் மீது வழக்கு


திருவள்ளூரில் சட்ட கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் - 30 பேர் மீது வழக்கு
x

திருவள்ளூரில் ஆந்திர மாநிலத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சட்ட கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் வடமலை பேட்டை சுங்கச்சாவடியில் தமிழக சட்ட கல்லூரி மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு காரில் வந்த போது காரில் வந்தவர்களின் பாஸ்ட் ட்ராக் ஸ்கேன் செய்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக 50-க்கும் மேற்பட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் மீது சுங்கச்சாவடி ஊதியர்கள் மற்றும் குண்டர்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களையும் அவர்கள் அடித்து நொறுக்கினார்கள்.

இந்த சம்பவத்தை கண்டித்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ரிபப்ளிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர், சட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என திரளானவர்கள் ஒன்றுகூடி சட்ட கல்லூரி மாணவர்களை தாக்கிய சம்பவத்தை கண்டித்து பேரணியாக வந்தனர். அப்போது அவர்கள் திருவள்ளூர் டோல்கேட் பகுதி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ரிபப்ளிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள் என 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.


Next Story