மாணவர்கள் தனித்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்
நான் முதல்வன் திட்டத்தை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் தனித்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பழனி அறிவுரை கூறினார்.
விழுப்புரம்
நான் முதல்வன் திட்டம்
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் "நான் முதல்வன்" திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழா குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் பழனி, கல்லூரி மாணவ- மாணவிகளுடன் பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
"நான் முதல்வன்" திட்டத்தின்கீழ், மேல்நிலைக்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதலும், உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தங்களின் திறனுக்கேற்ற துறையில் முதன்மை பெறும் வகையில் தொழில்துறைக்கே சென்று நேரடி சிறப்பு பயிற்சிகளும், "கல்லூரிக்கனவு" மூலம் கிராமப்புற மாணவர்களிடையே உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும், மேல்நிலைக்கல்வி பயின்று உயர்கல்வி படிக்காத மாணவர்களுக்கு "உயர்வுக்கு படி" நிகழ்ச்சியின் மூலம் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருகிறது.
தனித்திறனை மேம்படுத்த
"நான் முதல்வன்" திட்டத்தின்கீழ் பொறியியல், தொழிற்கல்வி, கலைக்கல்லூரி மற்றும் திறன்பயிற்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்களும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு வருவதால் கல்லூரியை முடித்து வெளிவருவதற்கு முன்பாகவே மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சீரிய முயற்சியால் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவுபெற்றுள்ளதால் அனைத்து தரப்பு மாணவர்களும் இத்திட்டத்தின்கீழ் தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டதோடு, தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதற்கு உறுதுணையாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே மாணவ- மாணவிகள் அனைவரும் இத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்வதோடு, இதுகுறித்த விழிப்புணர்வை மற்ற மாணவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) கலைமாமணி, தாசில்தார் வேல்முருகன், அரசு கல்லூரி முதல்வர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.