சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மழை: ஏரிகளுக்கு 70 கன அடி நீர்வரத்து


சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மழை: ஏரிகளுக்கு 70 கன அடி நீர்வரத்து
x

சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் ஏரிகளுக்கு 70 கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சென்னை

சென்னை மாநகருக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுடன் வீராணம் ஏரியில் இருந்தும் நீர் பெறப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தினசரி 1071.61 மில்லியன் லிட்டர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் குடிநீர் வழங்கும் ஏரிகளில் 9 ஆயிரத்து 177 மில்லியன் கன அடி (9.17 டி.எம்.சி.) இருப்பு உள்ளது.

இந்தநிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீர் மழை பெய்தது. குறிப்பாக பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் 22 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 34.8 மி.மீ., தாமரைப்பாக்கம் 5 மி.மீ., கொளத்தூர் அணைக்கட்டு 33 மி.மீ., மீனம்பாக்கம் 30.6 மி.மீ. என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது. இதன் மூலம் ஏரிகளுக்கு வரத்து கால்வாய் வழியாக 70 கன அடி நீர் வந்து உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 9 டி.எம்.சி. நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது என்று நீர்வளத்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story