ஊர்க்காவல் படையினரின் பணி நேரத்தை குறைக்கும் அரசாணைக்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி


ஊர்க்காவல் படையினரின் பணி நேரத்தை குறைக்கும் அரசாணைக்கு எதிரான வழக்கு - ஐகோர்ட்டில் தள்ளுபடி
x

தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள ஊர்க்காவல் படையினர் பணி நாட்களை மாதத்தில் 5 நாட்களாக குறைத்து 2017-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஊர்க்காவல் படையைச் சேர்ந்த அந்தோணி தாஸ் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஊர்க்காவல் படையினர் பணிக்காலம் 5 நாட்களில் இருந்து 10 நாட்களாக அதிகரிகப்பட்டு, அவர்களுக்கான ஊதியமும் எட்டு மணி நேரத்திற்கு 560 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பணி நாட்களை குறைத்து உத்தரவிட்ட அரசாணையை ரத்து செய்ய கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story