நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை


நாளை முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
x

4-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வுகள் நிறைவடைகின்றன.

சென்னை,

பண்டிகை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இன்றுடன் தேர்வுகள் முடிவடைவதால் நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் முடிந்துள்ளன. பிளஸ் 2வுக்கு விடைத்தாள் திருத்தம் பணி முடிந்து விட்டது. பிளஸ் 1 மற்றும், 10ம் வகுப்புக்கு விடைத்தாள் மதிப்பீடு நடந்து வருகிறது.

இந்நிலையில், ஒன்று முதல் 9ம் வகுப்புகளுக்கு, ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து வருகிறது. கடந்த 8ம் தேதி வரை சில பாடங்களுக்கு தேர்வுகள் நடந்தன. பின், ரம்ஜான், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் புத்தாண்டுக்கும், அதை தொடர்ந்து, ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி மற்றும் பொது தேர்தல் ஓட்டுப்பதிவுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

இந்த விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீதி இருந்த தேர்வுகள் துவங்கின. இன்றுடன் தேர்வுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து, நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜூன், 3 அல்லது 5ம் தேதி பள்ளியை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரம், தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஜூன் 6-ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகக் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு வெயில் மிகவும்கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பில் காலதாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது.


Next Story