பெரம்பலூரில் ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம்


பெரம்பலூரில் ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம்
x

பெரம்பலூரில் ஆடல், பாடல்களுடன் ஞாயிறு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்

ஞாயிறு கொண்டாட்டம்

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையிலும், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே நட்புறவை வளர்க்கும் வகையிலும் பெரம்பலூர் வாழ் மக்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் ஞாயிறு கொண்டாட்டம் (ஹேப்பி ஸ்ட்ரீட்) என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விடுமுறை நாளான நேற்று ஞாயிறு கொண்டாட்டம் நிகழ்ச்சி வெங்கடேசபுரத்தில் மாலை முதல் இரவு 7 மணி வரை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நமது பண்பாட்டு கலைகளான சிலம்பாட்டம், மான் கொம்பு, புலியாட்டம், வாள் வீச்சு, பரதநாட்டியம் ஆகியவை அரங்கேறியது. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாடலுக்கு ஏற்ப உற்சாகமாய் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனை காண வந்த பொதுமக்களும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். ஆனால் இந்த வாரம் நடத்தப்பட்ட ஞாயிறு கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி நன்றாக தான் இருக்கிறது. ஆனால் ஒரே இடத்தில் நடத்தாமல் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தெருவில் அல்லது இதற்காக போக்குவரத்து பாதிக்கப்படாத ஒரு இடத்தை தேர்வு செய்து அதில் ஞாயிறு கொண்டாட்டம் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story