ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கைது


ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கைது
x

மின் உரிமம் புதுப்பிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சென்னை

கிண்டி,

சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் 'ஏ' கிரேடு மின் உரிமத்தை புதுப்பிக்க தமிழ்நாடு மின் உரிம வாரியத்தில் மின்வாரிய ஒப்பந்ததாரர் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். 3 மாதங்களுக்கு பிறகு மின் உரிம வாரிய செயலாளரைச் சந்தித்து முறையிட்டார். அப்போது அவர், மின் உரிமம் தயாராக இருப்பதாகவும், கிண்டியில் உள்ள கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடமிருந்து பெற்று கொள்ளும்படியும் கூறினார்.

இதையடுத்து கிண்டி கண்காணிப்பாளர் ஸ்ரீதரை சந்தித்தபோது புதுப்பிக்கப்பட்ட உரிமம் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு மறுத்ததால் ரூ.3 ஆயிரமாக குறைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர், இதுபற்றி சென்னை ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பாளர் ஸ்ரீதரை கையும் களவுமாக பிடிக்க ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர். அதன்படி ரசாயன பொடி தடவிய ரூ.3 ஆயிரத்தை ஸ்ரீதரிடம் ஒப்பந்ததாரர் லஞ்சமாக கொடுத்தார். அந்த பணத்தை ஸ்ரீதர் வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று ஸ்ரீதரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story