ராமநாதபுரத்தில் மோடியை எதிர்த்து திமுக நேரடியாக போட்டியிட்டால் திமுகவுக்கு ஆதரவு- சீமான் பரபரப்பு பேட்டி
மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் திமுகவுக்கு ஆதரவளிப்போம் என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
கோவை,
நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சீமான் கூறியதாவது, நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக போட்டியிட்ட தொகுதிகளை எல்லாம் கூட்டணி கட்சிகளுக்குதான் பெரும்பாலான தொகுதிகளை ஒதுக்கியது. தூத்துக்குடியில் மட்டுமே எதிர்த்து போட்டியிட்டது. அது விதிவிலக்காக அமைந்துவிட்டது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிடுவதாக கூறுகின்றனர். ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் அப்படி பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் போட்டியிடும் போது திமுக தமது உதயசூரியன் சின்னத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்தட்டும். பிரதமர் மோடிக்கு எதிராக திமுக நேரடியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் அத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. பிரதமர் மோடியை எதிர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை.
திமுக, அதிமுகவுடன் எங்களுக்கு இருப்பது பங்காளி சண்டை. இதில் தலையிட பாஜக யார்? நீங்கள் நாட்டை ஏற்கனவே பிச்சைக்கார நாடாக வைத்திருக்கிறீர்கள். இனி தமிழ்நாட்டையும் அப்படி மாற்றப் போகிறீர்களா? உங்களுக்கு இங்க என்ன வேலை இருக்கிறது?
பாஜக வெறுப்பு அரசியலை பேசுகிறது. எப்போதும் இஸ்லாமியர், கிறிஸ்தவரை மட்டுமே எதிர்த்து பேசுவது என்பது விருப்ப அரசியலா என்ன? வெறுப்பு அரசியல்தானே. நான் வெறுப்பு அரசியலை பேசுகிறவன் அல்ல. தேசிய இனத்தின் உரிமைக்காக, தெளிவான புரிதலோடு நிற்கிறவன். இவ்வாறு சீமான் பேசினார்.