அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் - மத்திய மந்திரி அமித்ஷா


அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் - மத்திய மந்திரி அமித்ஷா
x

அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பேசினார்.

உற்சாக வரவேற்பு

இந்தியா சிமெண்ட் நிறுவன விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அதனைத்தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், ஏ.ஜி.சம்பத், சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், சுமதி வெங்கடேசன், பிரமிளா சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் அமித்ஷாவை கமலாலயத்திற்குள் அழைத்து சென்றனர்.

நிர்வாகிகள் கூட்டம்

கமலாலயம் வந்த அமித்ஷா மதிய உணவை அங்கு வைத்து சாப்பிட்டார். அதைத்தொடர்ந்து புதிய நீதிக்கட்சியின் நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து பா.ஜ.க. அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது, 'தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவுக்கு பின்னர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. தற்போது தமிழகத்தில் மோடி மீது மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அதனை பயன்படுத்தி, தமிழகத்தில் பா.ஜ.க.வை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு சமமாக வளர்க்க வேண்டும்' என்றும் அமித்ஷா பேசியதாக தெரிகிறது.

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும்

மேலும், குஜராத் தேர்தல் முடிவுக்கு பின்னர், அண்ணாமலை தலைமையில் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை வழங்குவோம். அதனை பின்பற்றி, தமிழகத்தில் நடைபெற்று வரும் வாரிசு அரசியலை தூக்கி எறிந்து, அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் அமித்ஷா ஆலோசனை வழங்கியதாக தெரிகிறது.

நிர்வாகிகள் கூட்டம் பிற்பகல் 3.15 மணியளவில் முடிவடைந்தது. டெல்லி செல்வதற்காக விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையிலும் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

இதற்கிடையே அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊக்கம் அளித்துள்ளது

பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகிய 2 தலைவர்களின் வருகை தமிழக பா.ஜ.க.வுக்கு ஊக்கம் அளித்து உள்ளது.

அமித்ஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் வளர்ச்சி குறித்து பேசப்பட்டது. தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? இன்னும் என்ன செய்ய வேண்டும்? நான் பிரதமரிடம் ஏதாவது கொண்டு செல்ல வேண்டுமா? என்று கேட்டறிந்தார். மாநில தலைவர் என்ற முறையில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியுடன் காரில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவரும் தமிழக மக்களுக்கு நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டறிந்தார். தமிழக மக்கள் மீது பா.ஜ.க. தலைவர்கள் மிகுந்த பாசமும், நம்பிக்கையும் வைத்துள்ளனர்.

நடவடிக்கை

சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் கருத்துகளுக்கு பா.ஜ.க.வினர் மீது எப்படிப்பட்ட பொய் வழக்குகளை பதிவு செய்கின்றனர் என்று எங்கள் சமூக வலைத்தள பிரிவு தலைவர் நிர்மல்குமார் மற்றும் மாநில துணை தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் ஒரு பட்டியலை அமித்ஷாவிடம் அளித்தனர். இதனை கவனிக்கிறேன். இதற்கு நடவடிக்கை எடுக்க உங்களிடம் உறுதி அளிக்கிறேன் என்று அமித்ஷா தெரிவித்தார்.

கோவை குண்டு வெடிப்பு சம்பவம் குறித்தும் பா.ஜ.க. மூத்த நிர்வாகிகளிடம் அமித்ஷா கேட்டு அறிந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story