முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் - கவர்னர் ஆர்.என்.ரவி
“முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார்” என்று கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டினார்.
பல்கலை. வேந்தர் மசோதா
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கவர்னருக்கு பதிலாக முதல்-அமைச்சரை பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமிக்க வகைசெய்யும் பல்வேறு சட்ட மசோதாக்கள், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு எனது ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவை எனது பரிசீலனையில் உள்ளன. ஆனால் அந்த மசோதாக்கள், பல்கலைக்கழக மானியக்கழு சட்டம் மற்றும் விதிகளுடன் ஒத்திசைந்து காணப்படவில்லை.
அந்த மசோதாக்கள் தற்போது ஆய்வில் உள்ளன. ஆய்வின் முடிவிலும் அதே கருத்துதான் இறுதிசெய்யப்பட்டால் அந்த மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி கொடுப்பது கடினம்தான். இறுதி முடிவுக்காக நான் காத்திருக்கிறேன். தமிழக அரசுக்கும் இதுதொடர்பான சில கருத்துகளை தெரிவித்திருக்கிறோம்.
அனுமதி வழங்குவதில் சிக்கல்
சித்தா பல்கலைக்கழகம் நிறுவுவது தொடர்பான மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்வதற்கு அனுமதி கொடுக்கும்போது, மத்திய சட்டங்களுடன் அந்த மசோதா சில விஷயங்களில் ஒத்திசைந்து இருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி இருந்தேன். ஆனாலும் நான் கூறிய கருத்துகள் பின்பற்றப்படாமல் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அதே நிலையில் எனது அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதுவும் ஆய்வு செய்யப்பட வேண்டியதுள்ளது.
கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பதால், மத்திய சட்டங்களுக்கு முரணாக இருந்தால் அந்த மசோதாவுக்கான அனுமதி வழங்குவதிலும் சிக்கல் நேரிடும்.
கிடப்பில் போடலாம்
அரசியல் சாசனத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ளவன் என்ற முறையில் மாநில அரசுக்கு தேவையான உதவிகளை செய்யத்தான் இருக்கிறேனே தவிர, அதிகார எல்லைகளை மீறுவதற்காக அல்ல. ஒரு சட்டமசோதாவுக்கு அனுமதி அளிப்பதை நிறுத்திவைக்கவும், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அதைக் கிடப்பில் போடவும் கவர்னருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் அளித்திருக்கிறது.
அரசின் செலவினங்களுக்கான பண மசோதாவாக இல்லை என்கிற பட்சத்தில், மற்ற மசோதாக்களுக்கு கவர்னர் அப்படியே தானாக ஒப்புதல் கொடுத்துவிட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று அரசியல் சாசனம் எதிர்பார்க்கிறதோ, அதையே செய்கிறேன்.
சிறப்பாக செயல்படுகிறார்
சனாதன தர்மம் பற்றிய எனது பேச்சு, அரசியல் சாசனம் வகுத்துள்ள எல்லைக்கு உட்பட்டதுதான்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றாலும் சரி, அமைச்சர்கள் என்றாலும் சரி, அவர்களிடம் நல்ல நண்பராகத்தான் நான் பழகுகிறேன். அவர்களிடம் எனக்கு கிஞ்சித்தும் பிரச்சினைகள் இல்லை. அவர்கள் எனக்கு மிக அருமையானவர்களாகவும், மரியாதை உள்ளவர்களாகவும் உள்ளனர். அரசியல் ரீதியாக என்ன பேசப்பட்டாலும், ஊடகங்களில் கருத்து கூறப்பட்டாலும், என்னை அது பாதித்ததில்லை. அதுதான் எங்களுக்கிடையேயான தனிப்பட்ட நட்புறவு. தி.மு.க. அரசுடன் நல்லுறவை அனுபவித்து வருகிறேன்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறந்த மனிதர். அவருடன் எனக்கு ஆழமான நட்புறவு உள்ளது. அவர் இந்த மாநிலத்துக்கும் அதன் மக்களுக்கும் நல்லதைச் செய்யும் எண்ணம் கொண்டவராக இருக்கிறார். அவரது திறனுக்கேற்றபடி சிறப்பாக பணியாற்றி வருகிறார். ஆனால் அதை அரசு முறைகளின்படி மேற்கொள்ள வேண்டும். நான் எந்த வருத்தத்தையாவது தெரிவிக்க விரும்பினால் அதை கடிதம் மூலம் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு மட்டுமே கொண்டு வருவேன். எனது கவலைகளை நான் பொதுவெளியில் பேசினால் அது சரியாக இருக்காது.
சட்டம்-ஒழுங்கு
கல்விக் கொள்கைகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். குறைந்துவரும் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதை எனது முன்னுரிமையாக வைத்துள்ளேன். தேசிய கல்விக் கொள்கை-2020, புரட்சிகரமான கொள்கைகளைக் கொண்டதாகும். சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் நல்ல பெயர் பெற்ற மாநிலம் தமிழகம். ஆனால் எஸ்.சி., ஆதிதிராவிடர், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தரவுகளை பார்க்கும்போது எனக்கு கவலை ஏற்படுகிறது. சிவில் உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழான குற்றங்களுக்கான தண்டனை விகிதமும் குறைவாகவே உள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு கைதி விடுதலை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதிகள் விடுதலையில் சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுக்கட்டும், ஒரு குறிப்பிட்ட கைதியின் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு முடிவு எடுத்தது. அதுபோல மற்றவர்களின் விடுதலையிலும் சுப்ரீம் கோர்ட்டே முடிவு எடுக்கட்டும். அரசியல் சாசனத்தின் 142-வது ஷரத்து அளித்துள்ள அதிகாரத்தை அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதைச் செய்வதற்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் கவர்னருக்கு அந்த அதிகாரம் இல்லை. எனவே அதுதொடர்பான மனுக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டேன்.
போலீஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறும் புகார் உள்ளிட்ட லஞ்ச, ஊழல் புகார்கள், மாநில அரசின் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா'அமைப்பு பற்றி நான் ஏற்கனவே கூறியிருப்பதன்படிஅது மிகவும் ஆபத்தான அமைப்பாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமும் 'தினத்தந்தி' வாசிக்கும் கவர்னர்
தமிழ்நாட்டில் கவர்னர்களாக வருவோருக்கு தமிழ் மொழி மீது ஆர்வம் வருவது இயல்பு.
அந்த வகையில் கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதற்காக ஒரு தமிழாசிரியரை நியமித்து தமிழ் கற்றுவந்தார். அந்த ஆசிரியரும் பல நாட்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று அவருக்கு தமிழை கற்றுத் தந்தார்.
தற்போது வீட்டில் இருந்தபடி, செல்போன் மூலம் கவர்னர் தமிழை எழுதி அந்த ஆசிரியருக்கு அனுப்புகிறார். அதை அந்த ஆசிரியர் திருத்தம் செய்து அனுப்புகிறார். இப்படி கவர்னர் ஆர்வமுடன் தமிழ் மொழியைக் கற்று வருகிறார்.
இதுதவிர, கவர்னர் தினமும் 'தினத்தந்தி' செய்திகளை எழுத்துக்கூட்டி வாசித்து வருகிறார். கவர்னர், 'தினத்தந்தி' யை வாசித்து தமிழை கற்றுக்கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுவதாக கவர்னர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.