தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது, சமத்துவம் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவில் 1931-ம் ஆண்டுதான் கடைசி யாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின்னர் நடைபெறவில்லை.

மக்கள்தொகை கணக்கெடுப்பு

கடந்த 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2024-ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று தெரிகிறது. அந்த சமயத்தில் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு அதன் விவரம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சில மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான முன்னெடுப்பில் ஈடுபட்டு வருகின்றன.

பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்

இதற்கிடையே தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் இணைத்து நடத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சாதிவாரி கணக்கெடுப்பு

இந்தியாவில் ஒருங்கிணைந்த சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு தயாராகி கொள்வதற்கான அவசியம் குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை என்பதையும், சாதிவாரியான தரவுகள் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான தகுதியுள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக உதவும் என்பதையும் கருத்தில் கொண்டு, அதை இனியும் தாமதிக்காமல் நடத்த வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது எப்போதுமே கொள்கைகளை வகுப்பதற்கான அடிப்படையாகவும், சமவாய்ப்பற்ற மக்களுக்கும் சமூக - பொருளாதார ஏற்றம் கிடைப்பதற்கான குறிக்கோளையும் கொண்டுள்ளது. சமுதாயத்தில் சமூக வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அளிக்கும் முக்கிய தீர்வாக இருப்பது, வரலாற்றுப்பூர்வமாகவே சாதியாகத்தான் உள்ளது. எனவே சாதி தொடர்பான உண்மையான தரவுகள், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டியது அவசியம்.

தொடர்ந்து பின்தங்கிய நிலை

முந்தைய திட்டங்களின் தாக்கம் குறித்தும், எதிர்கால திட்டமிடல் குறித்தும், கொள்கைகளை உருவாக்குவோர் ஆய்வு செய்து முடிவு எடுப்பதற்கு அது உதவிகரமாக இருக்கும். இந்தியாவில் 1931-ம் ஆண்டுதான் கடைசியாக சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருந்ததால், இந்த காலகட்டத்திற்கு தேவையான தரவுகள் தற்போது கைவசம் இல்லை.

கடந்த 90 ஆண்டுகளில் பிறப்பு - இறப்பு மற்றும் சமூக - பொருளாதார விகிதாச்சாரங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனால் முந்தைய கொள்கைகளின் பல்வேறு நடவடிக்கைகளால் சமவாய்ப்பற்ற நலிவுற்ற பிரிவினர் தொடர்ந்து பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர். சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு, சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை நிலைநாட்ட இயலும். சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் உறுதி செய்ய முடியும்.

சட்டப்பூர்வமான பின்னணி

சாதிவாரியான கணக்கெடுப்புகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு பீகார் போன்ற சில மாநில அரசுகள் நல்ல அணுகுமுறையை மேற்கொண்டு உள்ளன. சில மாநிலங்கள் அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டாலும், நமது சமுதாயத்தில் உள்ளார்ந்த பார்வையை மேற்கொண்டு தேவையை சரி செய்ய அவை உதவினாலும், தேசிய அளவிலான ஒப்பீடுகள் கிடைக்கவில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் பட்டியலில் இருப்பதால், அதை மாநில அரசுகள் மேற்கொள்ளும் மாநிலங்கள் சட்டப்பூர்வமான பின்னணியை பெற முடியவில்லை. எனவே, முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் கூடிய இந்திய சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு மட்டுமே, சமூக நீதியை நிலைநிறுத்துவதற்கான பொருத்தமான தளத்தை வழங்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம்.

வலிமையான இந்தியா

இவற்றை வைத்து பார்க்கும் போது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை ஒருங்கிணைப்பதன் மூலமாகத்தான், நமது சமூகத்தின் சாதி அமைப்பு மற்றும் அந்த சாதிகளின் சமூக-பொருளாதாரம் பற்றிய பிரதிபலிப்பு குறித்த நம்பகமான தரவுகளை வழங்க முடியும் என்பது தெரியும். இதுதான், சான்றுகளின் அடிப்படையில் கொள்கைகளை வகுக்கவும், சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யவும் உதவுகிறது.

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒரே நேரத்தில் இந்த பணியை மேற்கொள்வது, நாடு முழுவதும் உள்ள தரவுகளின் ஒப்பீட்டை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் அதற்கேற்றபடி நன்மைகளை அளிக்க உதவி செய்கிறது.

எனவே, சாதிவாரி கணக்கெடுப்பை, வரவிருக்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒருங்கிணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு எடுத்துச் செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் இந்த முயற்சி ஒரு மகத்தான நடவடிக்கையாக இருக்கும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story