காலை உணவு திட்டத்திற்காக கூடுதல் அதிகாரிகள் நியமனம்; தமிழக அரசு அறிவிப்பு


காலை உணவு திட்டத்திற்காக கூடுதல் அதிகாரிகள் நியமனம்; தமிழக அரசு அறிவிப்பு
x

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் வரும் ஆகஸ்டு 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டம் வருகிற 25-ந்தேதி முதல் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்குவளையில் நடக்கும் நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தை கண்காணிக்க கூடுதல் அதிகாரிகளை நியமித்து, தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசாணை வெளியிட்டு இருக்கிறது.

அதில், ' முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தினந்தோறும் கண்காணிக்கும் பொருட்டு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவுத் திட்டம்) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவுத் திட்டம்) ஆகியோருக்கு பொறுப்புகளை கூடுதலாக நிர்ணயம் செய்து அரசு ஆணையிடுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாணவருக்கும் காய்கறிகளுடன் 100 மி.லி. சாம்பார் மற்றும் 150-200 கிராம் உணவு வழங்கப்படும். வாரத்திற்கு இரண்டு முறையாவது உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்களைக் கொண்டு காலை உணவு வழங்கப்படும் எனவும், மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் 8.50 மணி வரை உணவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story