தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடத்தப்படும்: சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் உரை


தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடத்தப்படும்: சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் உரை
x
தினத்தந்தி 30 March 2023 6:15 AM GMT (Updated: 30 March 2023 6:22 AM GMT)

தமிழக அரசு சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடத்தப்படுமென சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறும்போது,

1924 மார்ச் 30ல் சமூக சீர்த்திருத்தத்தின் அடையாளமாக விளங்கும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நாள் இது. இந்தியாவின் சமூக நீதி வரலாற்றின் வைக்கம் போராட்டம் முக்கிய இடம் பெற்றது. பெரியார் நடத்திய முக்கிய போராட்டங்களில் ஒன்று வைக்கம் போராட்டம்.

இந்த போராட்டம் ஒன்றரை ஆண்டுகள் நடைபெற்றது. 1925ல் இது முடிவுக்கு வந்தது. வைக்கம் வீரர் என்று தமிழ்த்தென்றல் திருவிக பாராட்டினார். இன்றுவரை வைக்கம் போராட்டம் சமூக நீதி வரலாற்றில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

பெரியாரை போற்றும் விதமாக 110 விதியின் கீழ் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறேன். வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிகழ்ச்சிகளை தமிழக அரசு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவை தமிழக அரசு தொடங்கவுள்ளது. இந்த விழா 2023 மார்ச் 30 தொடங்கி ஓராண்டு வரை நடைபெறும். போராட்டத்தின் நோக்கத்தையும், வரலாற்றையும், வெற்றியையும் பொதுமக்கள் அறியும் வகையில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.

வரும் ஏப்ரல் 1 அன்று கேரள் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கேரள முதல் மந்திரியோடு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறேன்.

வரும் நவம்பர் 29 ஆண்டும் தமிழக- கேரள முதல் மந்திரிகள், முக்கிய அதிகாரிகள் பங்கேற்கும் வகையில் முக்கிய நிகழ்ச்சி ஒன்று தமிழகத்தில் நடத்தப்படும். சமூக நீதி நாளான செப்டம்பர் 17 அன்று வைக்கம் விருது வழங்கப்படும்.

பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்கள், நிறுவனங்களுக்கு வைக்கம் விருது வழங்கப்படும்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் முக்கிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வைக்கம் போராட்டம் தொடர்பான கருத்தரங்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பெருமைமிகு திராவிட மாடல் ஆட்சி நடந்துக்கொண்டிருக்கும்போது வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா வருவது பெருமைக்குரியது. இவை அனைத்தும் ஓராண்டுக்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story