மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
x
தினத்தந்தி 19 Aug 2023 10:00 PM GMT (Updated: 19 Aug 2023 10:00 PM GMT)

‘மருத்துவத்துறையில் இந்திய அளவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது’ என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மருத்துவமனை தொடக்க விழா

தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாக்டர் வாஞ்சிலிங்கம் நியூராலஜி மருத்துவமனை, சென்னை கொரட்டூர் டி.வி.எஸ். நகரில் உள்ள ஆர்.பி.எஸ். மருத்துவமனை வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை தொடக்க விழா சென்னை வடபழனியில் நேற்று நடந்தது.

இந்த விழாவுக்கு முன்னால் மத்திய இணை மந்திரி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். டாக்டர் வாஞ்சிலிங்கம் மருத்துவமனை தலைவர் டாக்டர் சோமேஷ் வாஞ்சிலிங்கம், இணை இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் வாஞ்சிலிங்கம், நிர்வாக குழு உறுப்பினர்கள் டாக்டர் வள்ளிநாயகி வாஞ்சிலிங்கம், டாக்டர் சோபியா சோமேஷ், முன்னாள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சந்திரசேகரன், தஞ்சை மாவட்ட மேயர் சன் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோல்டன் ஹவர்ஸ்

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

வயதானவர்களுக்கு நரம்பு தளர்ச்சி வருகிறது. உடல் ரீதியாக ஒரு ஸ்ட்ரோக் வரும்போது, அதாவது ஏதாவது ஒரு பாகம் செயலிழந்தாலும் அதை மீட்பதற்கான கோல்டன் ஹவர்ஸ் இருக்கிறது என்கிறார்கள். உடனடியாக மருத்துவமனைக்கு சென்றால், செயலிழந்த பாகத்தை மீட்டெடுக்க முடியும் என்ற நிலையில் தான் நாம் இப்போது இருக்கிறோம்.

இந்தியாவிலேயே தமிழகம் தான்

தமிழகத்தை பொறுத்தவரை முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்துக்காக 2022-23-ம் ஆண்டுக்காக ரூ.1,574 கோடியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி இருக்கிறார். மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. அதனால் தான் உலக நாடுகளில் இருந்து தமிழகம் நோக்கி ஏராளமானோர் வருகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story