மத்திய தொகுப்புக்கு தமிழகம் வழங்கும் அரிசி கணிசமாக குறைந்தது


மத்திய தொகுப்புக்கு தமிழகம் வழங்கும் அரிசி கணிசமாக குறைந்தது
x

நடப்பு பருவத்தில் அரிசி கொள்முதல் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 44.6 சதவீதம் கொள்முதல் குறைந்துள்ளது

விருதுநகர்

மாநில அரசுகள், தங்களது மாநில விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்து, ஒரு பகுதியை வைத்துக் கொண்டு மீதியை அரிசியாக மாற்றி மத்திய தொகுப்புக்கு அளித்து வருகின்றன.

மத்திய அரசு நடப்பு காரிப்பருவத்தில் அரிசி கொள்முதல் தொடங்கியுள்ள நிலையில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அரிசி கொள்முதல் குறைவாக நடந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

சாகுபடி பாதிப்பினால் இந்த குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நடப்பு பருவத்தில் 15 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.

கடந்த 15 நாட்களில் தமிழகத்தில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 342 லட்சம் டன் அரிசி கொள்முதல் நடந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் உள்ள 15 நாட்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 382 டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. அதை ஒப்பிடும்போது தற்போது 44.6 சதவீதம் அரிசி கொள்முதல் குறைந்துள்ளது.

அதே நேரத்தில் உத்தரபிரதேசம், அரியானா, பஞ்சாப்பில் கடந்த ஆண்டைவிட தற்போது இதே பருவத்தில் அதிக அளவில் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

மற்ற மாநிலங்களில் கடந்த ஆண்டு 10 லட்சத்து 517 டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது 11 லட்சத்து 848 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தத்தில் கடந்த ஆண்டு, இதே பருவத்தில் நாடு முழுவதும் கடந்த 15 நாட்களில் 32 லட்சத்து 44 ஆயிரத்து 294 டன் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது 39 லட்சத்து 57 ஆயிரத்து 486 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தாலும், தமிழகத்தில் உற்பத்தி குறைந்து இருப்பது மகிழ்ச்சியான விஷயம் அல்ல என வேளாண் துறை வல்லுனர்கள் தெரிவித்தனர்.

தேசிய அளவில் நடப்பாண்டில் 411.96 லட்சம் எக்டேரில் நெல் சாகுபடி நடந்துள்ள நிலையில் கடந்த ஆண்டு 404.27 லட்சம் எக்டேரில்தான் நெல் சாகுபடி நடந்தது. கடந்த ஆண்டை விட தற்போது நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் வறட்சி போன்ற காரணங்களால் சாகுபடி சரியாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட தகவலை மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story