காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்: மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது
காந்திஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்ட நிலையில், கள்ளச்சந்தையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் கடைகள் மூடல்
காந்திஜெயந்தியையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார். மேலும் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் திருத்தணி-அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் அருகே உள்ள வள்ளியம்மாபுரம் பகுதியில் நேற்று மதுபாட்டில்கள் திருட்டுத்தனமாக மர்ம நபர்களால் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் நேற்று மேற்கண்ட பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
மது விற்ற 2 பேர் கைது
அப்போது வள்ளியம்மாபுரம் புறவழிச்சாலை உயர்மட்ட பாலம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 285 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த கனகராஜ் (வயது) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டுஅடையன் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (27) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.