மோட்டார் சைக்கிள் மோதி 6 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் பலி; போதையில் விபத்து ஏற்படுத்திய வாலிபர், தோழியுடன் கைது


மோட்டார் சைக்கிள் மோதி 6 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் பலி; போதையில் விபத்து ஏற்படுத்திய வாலிபர், தோழியுடன் கைது
x

அண்ணா வளைவு அருகே சாலையை கடந்து செல்ல முயன்றபோது மோட்டார்சைக்கிள் மோதி 6 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் பலியானார். போதையில் விபத்து ஏற்படுத்திய வாலிபர் தனது தோழியுடன் கைதானார்.

சென்னை

கடையில் ஆயுத பூஜை

சென்னை அரும்பாக்கம் என்.எஸ்.கே. தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவ்காந்தி (வயது 32). இவர், அண்ணாநகரில் ஸ்டிக்கர் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பூங்குழலி (27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். குழலி ஸ்ரீ என்ற 6 மாத பெண் குழந்தையும் இருந்தது.

சஞ்சீவ்காந்தி தனது கடையில் நேற்று ஆயுதபூஜை கொண்டாட முடிவு செய்தார். இதற்காக கணபதி ஹோமம் நடத்தவும் ஏற்பாடு செய்து இருந்தார். இதற்காக நேற்று அதிகாலையில் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து கடைக்கு புறப்பட்டு சென்றார். அமைந்தகரையில் உள்ள அண்ணா வளைவு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றனர். முதலில் சஞ்சீவ் காந்தி தனது மூத்த மகளுடன் சாலையை கடந்து சென்று விட்டார். அவருக்கு பின்னால் அவருடைய மனைவி பூங்குழலி, 6 மாத கைக்குழந்தையுடன் சாலையை கடந்து செல்ல முயன்றார்.

6 மாத குழந்தையுடன் பெண் பலி

அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள், சாலையை கடக்க முயன்ற பூங்குழலி மீது பயங்கரமாக மோதியது. இதில் கைக்குழந்தையுடன் பூங்குழலி தூக்கி வீசப்பட்டார். அவர் மீது மோதிய மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபர் மற்றும் அவருடன் வந்த இளம்பெண் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளும் நொறுங்கியது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சஞ்சீவ்காந்தி அருகில் சென்று பார்த்தபோது தனது மனைவி பூங்குழலி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். தனது 6 மாத குழந்தையை காப்பாற்ற உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தனது கண் எதிரேயே மனைவி மற்றும் குழந்தை பலியானதை கண்டு சஞ்சீவ் காந்தி கதறி துடித்தார். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது.

தோழியுடன் வாலிபர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான தாய்-மகள் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தை ஏற்படுத்திய மோட்டார்சைக்கிளில் வந்து காயம் அடைந்த 2 ேபரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தவர், அரும்பாக்கம், வள்ளுவர் தெருவைச்சேர்ந்த நிகல் (24) என்பதும், உடன் வந்த பெண் அவருடைய தோழியான கல்லூரி மாணவி கிருத்திகா (22) என்பதும் தெரியவந்தது.

நிகல் மது அருந்திவிட்டு கிருத்திகாவை அழைத்துக்கொண்டு அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததும், அவரை அதிவேகமாக ஓட்டுவதற்கு கிருத்திகா உற்சாகப்படுத்தியதாகவும் தெரியவந்தது. இதையடுத்து நிகல் மற்றும் அவரது தோழி கிருத்திகா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story