சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பதற்றம்: பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - மகனை வெட்டிக்கொல்ல முயன்ற 6 பேர் கைது


சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் பதற்றம்: பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - மகனை வெட்டிக்கொல்ல முயன்ற 6 பேர் கைது
x

பழைய வண்ணாரப்பேட்டையில் பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட கும்பல் அவரது மகனை வெட்டிக்கொல்ல முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் சத்யநாராயணன் (வயது 57). பா.ம.க. கட்சியில் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவருடைய மகன் நிஷால் (19) தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு காசிமேடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, 3 மோட்டார் சைக்கிள் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரைச் சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களுடன் பட்டாகத்தியால் வெட்ட முயன்றனர்.

அப்போது இதனை சுதாரித்துக்கொண்ட நிஷால் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து நிஷால் அவர் தந்தை சத்யநாராயணனிடம் கூறியுள்ளார்.

உடனே தந்தையுடன் சென்று காசிமேடு போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில், கொலை முயற்சி விணான நிலையில், ஆத்திரம் தீராத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தண்டையார்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள சத்திய நாராயணன் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றனர்.

இதுகுறித்து பா.ம.க. மாவட்ட செயலாளர் சத்யநாராயணன் தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார். இது குறித்து தகவல் அறிந்த வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி, போலீஸ் உதவி கமிஷனர்கள் இருதயம், முகமது நாசர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜன், முருகானந்தம், ரவி, தவமணி ஆகியோர் தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி, அப்பகுதியில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக நிஷாலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதற்கு பழிதீர்க்கும் வகையில் முன்விரோதத்தில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் நிஷாலை கொல்ல முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டை வீசிச்சென்ற மர்ம கும்பலை தேடி வந்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் பெட்ரோல் குண்டு வீசிய பாட்டில் கண்ணாடிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இந்த தகவலை அறிந்த பா.ம.க. முன்னாள் மத்திய ரெயில்வே இணை மந்திரி மூர்த்தி நேரில் சென்று மாவட்ட செயலாளர் சத்தியநாராயணன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இந்த சம்பவத்தையொட்டி, அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால், பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதற்கிடையே பா.ம.க. பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்த ஷரிஷ் (19), ஆகாஷ் (20), ஆனந்த் (23), சாய் காந்த (19), அருண் (20) கணேஷ் (19) ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

செங்கல்பட்டில் கடந்த 9-ந் தேதி இரவு பா.ம.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று பா.ம.க. மாவட்ட செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story