தேவகோட்டை அருகே பயங்கரம்: கொள்ளையர் தாக்கியதில் இளம்பெண் சாவு


தேவகோட்டை அருகே பயங்கரம்: கொள்ளையர் தாக்கியதில் இளம்பெண் சாவு
x

தேவகோட்டை அருகே வீடு புகுந்து கொள்ளையர் தாக்கியதில் இளம்பெண் பலியானார். அவரது தாய், மகனை வெட்டி விட்டு நகைகளை கொள்ளையடுத்து சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா. இவர் இறந்துவிட்டார். இவருடைய மனைவி கனகம் (வயது 65). இவர்களுக்கு 3 மகள்கள். 3 பேருக்கும் திருமணமாகிவிட்டது.

இதில் கடைசி மகள் வேலுமதியை (35), பாகடி கிராமத்தை சேர்ந்த குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். குமார் மலேசியாவில் வேலை செய்து வருகிறார்.

வேலுமதி தன் மகன் மூவரசுடன் (12) தாய் வீட்டில் வசித்து வந்தார். மூவரசு, தேவகோட்டை ராம்நகரில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்தநிலையில் கனகத்தின் மூத்த மகளான சாந்தியின் மகளுக்கு, திருமண ஏற்பாடுகள் நடந்தன. இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகைக்கடைக்கு சென்று நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கி கனகம் வீட்டில் வைத்திருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, கனகம், வேலுமதி, மூவரசு ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்தனர். அவர்கள் ஹாலில் தூங்கி கொண்டிருந்தனர்.

அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அந்த நேரம் திடுக்கிட்டு எழுந்த வேலுமதியின் முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்ததுடன் வேலுமதி தலையில் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கினர். மேலும் அரிவாளால் அவரது முகத்தில் சரமாரியாக வெட்டினர்.

இந்த சத்தம் கேட்டு எழுந்த கனகத்தையும், அவருடைய பேரன் மூவரசையும் மர்ம நபர்கள் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். 3 பேரும் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடினர். அதன்பின்னர் பீரோவை உடைத்து அதில் திருமணத்துக்காக வைத்திருந்த 60 பவுன் நகைகள் மற்றும் குடங்கள், தட்டு உள்ளிட்ட 30 வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர்.

பின்னர் வீட்டின் முகப்பில் மிளகாய் பொடியை தூவிவிட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த நிலையில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் நேற்று காலை கனகத்தின் வீட்டுக்கு வந்தார். வெளியில் நின்று கொண்டு அவர் கூப்பிட்டும் வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. அப்போது சிறுவன் மூவரசு பேசமுடியாமல் ஜன்னல் வழியாக சைகை காண்பித்தான்.

இதனால் சந்தேகம் அடைந்த பெரியசாமி வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு வேலுமதி கொலை செய்யப்பட்டு கிடந்ததையும், கனகம் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததையும், சிறுவன் படுகாயத்துடன் போராடிக் கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் உடனடியாக தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய கனகம், சிறுவன் மூவரசு ஆகியோரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலை செய்யப்பட்ட வேலுமதி உடலை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் மோப்ப நாய் லைகா, அந்த வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு ஓடியது. அந்த பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தின் அருகே நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர்.

இந்த பயங்கர சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பிச்சென்ற கொள்ளை கும்பலை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று டி.ஐ.ஜி. துரை கூறினார்.

திருமணத்துக்காக நகைகள் வாங்கி வீட்டில் வைத்திருந்ததை நோட்டமிட்டு தெரிந்து கொண்ட கும்பல்தான் இந்த பயங்கர சம்பவத்தை செய்திருக்க வேண்டும் என போலீசாரின் முதற்கட்ட விசாரணை தகவல்கள் கூறுகின்றன. எனவே அந்த வீட்டைப்பற்றி அறிந்திருந்த நபரின் துணையுடன் கொள்ளையர்கள் இவ்வாறு வெறியாட்டம் நடத்தி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.


Next Story