நெல்லை அருகே பயங்கரம்: இலங்கை அகதி வெட்டிக்கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


நெல்லை அருகே பயங்கரம்: இலங்கை அகதி வெட்டிக்கொலை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

நெல்லை அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இலங்கை அகதி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை அருகே கங்கைகொண்டானில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு இலங்கையில் இருந்து அகதியாக வந்த ராமச்சந்திரன் (வயது 52) என்பவர் வசித்து வந்தார்.

கூலி தொழிலாளியான இவர் தனியாக தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இவருடைய குடும்பத்தினர் இலங்கையில் உள்ளனர்.

இந்த நிலையில் கங்கைகொண்டான் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் ராமச்சந்திரன் மர்மநபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். நேற்று காலையில் இதனைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்து, கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டனர்.

நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில், தலைமறைவான மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தி, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தினமும் வருவாய்த்துறையினர், உளவுப்பிரிவு போலீசார் சென்று பார்வையிட்டு, முகாமில் எத்தனை பேர் உள்ளனர்? எத்தனை பேர் வெளியே சென்றுள்ளனர்? முகாமில் உள்ளவர்களுக்கு இடையே ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பாதுகாப்பு மிகுந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அகதி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story