வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா


வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா
x

தைப்பூச திருநாளை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை

கோலாகல கொண்டாட்டம்

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம், பூச நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசம் எனப்படுகிறது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு விழாவாக பழனியில் அனுசரிக்கப்படுகிறது. பழனியில் மட்டுமல்லாமல் தைப்பூச திருவிழா அறுபடை வீடு உள்பட அனைத்து முருகன் கோவில்களிலும் விமரிசையாக கொண்டாடப்படும். பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும், மொட்டை போட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

அந்தவகையில், சென்னையில் வடபழனி ஆண்டவர் கோவில், கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் உள்பட முருகன் கோவில்களில் நேற்று தைப்பூசம் விழா சிறப்பு அர்ச்சனையுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வடபழனி முருகன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்த பாலால் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து பழனி ஆண்டவர் 4 மாடவீதிகளையும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று அதிகாலை 5 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 'அரோகரா... அரோகரா...' என்ற விண்ணை முட்டும் கோஷத்துடன் முருகனை தரிசனம் செய்தனர். கோவிலின் நுழைவு வாயிலில் இருந்து வடபழனி சிக்னல் வரை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேலாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில் வாசலின் இருபுறமும் பக்தர்கள் வரிசையாக வரும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்பு நடவடிக்கை

ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர், மோர் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்களை ஒழுங்குபடுத்த 300-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க உயர் கோபுரம் அமைக்கப்பட்டும், ஒலி பெருக்கிகள் மூலமும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல, கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சென்னை மட்டுமின்றி சென்னை புறநகர் பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.


Next Story