தமிழ்நாட்டில் 34 ரெயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி - கவர்னர் ஆர்.என்.ரவி


தமிழ்நாட்டில் 34 ரெயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி - கவர்னர் ஆர்.என்.ரவி
x

உலகத் தரம் வாய்ந்த பொது வசதிகள் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு அதிக இணைப்பு, வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

சென்னை,

அம்ரித் பாரத் ரெயில் நிலையம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 554 ரெயில் நிலையங்களை உலகத்தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் சென்னை கடற்கரை, பூங்கா, அம்பத்தூர், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, ஈரோடு, மொரப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருச்செந்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம், விருத்தாச்சலம், தர்மபுரி, ஒசூர் உள்ளிட்ட 34 ரெயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்த நிலையில் ரெயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ், ரெயில் கட்டமைப்புகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்துக்கு வழிவகுத்து, தமிழ்நாட்டில் உள்ள 34 ரெயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் உலகத் தரம் வாய்ந்த பொது வசதிகள் தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு அதிக இணைப்பு, வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும். தொலைநோக்கு தலைமையின் கீழ், தமிழ்நாடு முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பாக ரெயில்வே, நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், வீட்டுவசதி போன்ற துறைகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டு வருகிறது. தற்போதைய திட்டங்கள் ரூ.45,769 கோடிக்கு மேல் உள்ளதால், மாநிலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்ட ஆயத்தமாக உள்ளது." என்று தெரிவித்து உள்ளார்.


Next Story